சென்னை அலுவலகத்திற்கு ஒரு அன்பர் ஜீவநாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, அவரை நான் பார்த்த நிமிடம், வினாடி நேரத்தைத் துல்லியமாகக் குறித்துக்கொண்டு, "பிரசன்ன நாடி' ஓலையைப் பிரித்துப் பார்த்தேன். அதில், இவர் தன் இப்பிறவி விதிப்பலனையும், வருங்கால வாழ்க்கைநிலை பற்றியும் அறிந்துகொள்ள வந்துள்ளார் என்று வாக்கு வந்தது.
அகத்தியர் பெருமானை வணங்கி "ஜீவநாடி' ஓலையைப் பிரித்துப் பலன் கூறத்தொடங்கினான்.
அகத்தியர் ஓலையில் தோன்றி-
"சஞ்சிதகர்மம் தீர்த்துவம்ச
சாபம்தனைத் தீர்க்க
வல்லகுருதிரு வடியைப் பின்
வாழ்வில் தேடி நிற்பான்'
என்று ஆரம்பித்து பலன்களைக் கூறத்தொடங் கினார்.
""இவன் விரக்தி மனப்பான்மையுடன், வாழ்வில் பிறப்பில்லாமல் சந்நியாசி போன்று குழப்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். முற்பிறவி பாவ- சாபம், கர்மவினைகளை அறிந்து, அதை நிவர்த்திசெய்து, இனிவரும் வாழ்நாளில் நன்மையும், சுகத்தையும் அடைய வழிகேட்டு அகத்தியனை நாடி வந்துள்ளான்.
இவனது எதிர்கால வாழ்க்கை பற்றிக் கூறும் முன்பு, இவன் கடந்தகால வாழ்வில் அனுபவித்ததையும், இப்பிறவி ஊழ்வினை அமைப்பையும் முதலில் கூறுகிறேன். கடந்தகால வாழ்வின் அனுப வங்களை அறிந்துகொண்டால்தான், இனி இவன் வாழ்க்கை உயர்வுக்கு நான் கூறும் பாவ- சாப நிவர்த்தி வழிமுறைகள்மீது நம்பிக்கையும், தன்னையறியும் அறிவும் உண்டாகும்.
இவன் பிறந்த ஊர் மலை மற்றும் சிறு காட்டுப்பகுதி, முட்செடிகள், முரடான கற்பாறைகள், ஆட்டுமந்தைகள் மேயும் நிலப்பகுதிலுள்ள ஒரு கிராமம். இவன் பிறந்த இடத்திற்கருகில் அல்லது வசிக்குமிடத்திறகு அருகில் பிரசித்தமான கருப்பு தேவதை ஆலயம், ஞானி, மகான், சந்நியாசி போன்றவர்களின் சமாதி இருக்கும். இவன் பிறந்த வீடு கிழக்கு- மேற்கு விதியில், தெற்கு- வடக்கு நோக்கி முன்வாசல் உள்ள வீடு.
இவனது இப்பிறவி வாழ்க்கை, அவதார புருஷரான கிருஷ்ணரின் வாழ்க்கையைப் போன்றது. கிருஷ்ணரின் பிறப்பு போன்று இவனும் பிறந்து, தன் இளம்வயதில் தாய்- தந்தை யைப் பிரிந்து, பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டதுபோல், மூன்றாம் மனிதர் ஆதரவில் வாழ்ந்துவளர்ந்தான். தன் தந்தையை இளம்வயதிலேயே இழந்தவன். இவன் சம்பாதிக்கும் காலத்தில் அவனைப் பெற்ற தந்தை அனுபவிக்கமாட்டார்.
பித்ரு தோஷம்
இவனது முற்பிறவி,
முனனோர்கள் வாழ்வில்-
"குணமது தாய்தகப்பன்
சிறுமையாய்ப் பார்த்திருக்க
தேவியும் தானும்கூடி
பருகிய அன்னத்தால்
கூச்சலாய் பெற்றோர்
கோபத்தால் விட்ட சாபம்
இப்பிறவியில் பித்ரு தோஷமாய்த்
தொடர்ந்து வந்த சாபம்.'
வம்சத்தில் உண்டான இந்த சாப தோஷத்தால், இப்பிறவியில் இவனுக்கு முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகளாலோ, தந்தைவழி உறவுகளாலோ, தன் சொந்த இனத்து மக்களாலோ, நண்பர்களாலோ எந்த நன்மையும் உதவியும் கிடைக்காது. பிறர் ஆதரவில்லா பேதை மனிதன் இவன்.
புத்திர சாபம்
"பதிபெறும் வம்ச முன்னோர்
பழிகூறி செத்திறந்து
கதிபெற தோஷம் கெடுதிகள்
மிகவே செய்யும்
சதிபெற புத்ரலாபம்
காணாமல் கெடுத்திடுமே
கோலமா யிருந்து சேயை
பெறாமல் செய்திடுமே.'
இவன் வம்சத்தில் பெற்ற தாய்- தந்தைக்கு அன்னம்,தண்ணீர் கொடுக்காமல் பசியும், பட்டினியுமாய் அலையவிட்டதால் சாபம்விட்டு இறந்தார்கள். தான் பெற்ற குழந்தையை கவனியாமல், ஒரு மகனுக்குத் தந்தை செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் விட்டுவிட்டான். அதனால் இப்பிறவியில் இவனது விந்தில் வம்ச முன்னோர்கள், புத்திரனாக வந்து பிறப்பதில் தடை ஏற்பட்டது. மனைவிக்கு கரு கூடினாலும் அது கலைந்துபோனது.
இந்த புத்திர சாபத்தால் இவனுக்கு புத்திர பாக்கியம் கிட்டாமல் போனது. அதனால் புத்திரர்களாலும் நன்மை கிடைக்காமல் போனது. கிருஷ்ணாவ தாரத்தில், கிருஷ்ணர் தான் பெற்ற பிள்ளைகளால் நன்மைகளை அடையவில்லை. கிருஷ்ணரின் இறப்பிற்கு முன்பே அவரது பிள்ளைகள் இறந்துவிட்டார்கள். இது புத்திர சாப தோஷம்.
தொழில்- ஜீவனம்
இவனுக்கு பள்ளிக்கல்வி தடைப்படும்; பாதியில் முடியும். உயர்கல்வி இல்லை. இளம்வயதிலேயே வேற்றூர் சென்று பல தொழில்களைச் செய்து, முப்பது வயதிற்குமேல் ஒரு சாதாரண ஊழியனாக ஓரிடத்தில் உத்தியோகத்தில் சேர்ந்து, தன் சுய உழைப்பால், உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களின் நம்பிக்கை யையும், ஆதரவையும் பெற்று, படிப்படியாக உயர்ந்து, இன்று நிர்வாகப் பொறுப்பைப் பெற்றுள்ளான். இன்று இவனுக்குக்கீழ் பலர் வேலை செய்யும் நிலையையும், பலரைக் காப்பாற்றும் நிலையையும் அடைந்து தன் சுய உழைப்பால் வாழ்கிறான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/krish_9.jpg)
ஒரு சாதாரண கிராமத்தில்- குடும்பத்தில் பிறந்து, இன்று பலரும் அறியத்தக்க பிரமுக ராக உள்ளான். இவன் உழைப்பு இவனுக்கு வாழ்வில் உயர்வைத் தந்துவருகிறது.
இப்பிறவியில் இவனுக்கு கணக்காளர், ஆன்மிகம், ஜோதிடம், மக்கள் தொடர்பு சார்ந்த தொழில்கள், அச்சுத்தொழில் போன்ற தொழில்கள் இவன் ஜீவனத்திற்கான வருமானத்தையும், புகழையும் குறைவில்லாமல் தரும்.
பொருளாதாரம்
இவன் எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்காது. பணத்தோடு பணம் சேர்க்கமுடியாது. நிலையான சொத்துகளை (வீடு, நிலம், ஆபரணம்) அடையமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து, பின் மொத்தமாக செலவு செய்துவிடுவான். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக வளர்ந்தும் தேய்ந்தும் இருக்கும். கையில் உள்ள பணம் செலவழிந்து தீர்ந்தால், உடனே எங்கிருந்தாவது இவன் கைக்கு பணம் வரும். பணத்திற்கு இவனுக்குத் தடையிருக்காது. ஆனால் சேமித்துவைக்க முடியாது. இவன் பணத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் தெரியாதவன். எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை இல்லாமலேயே இன்றுவரை வாழ்ந்துவருகிறான்.
இவனது உழைப்பு, அறிவு, திறமை என அனைத்தும் மற்றவர்களை உயர்த்திவைப் பதாகவே உள்ளது. சாலையோரத்தில் உள்ள ஒரு மரம் இயற்கை தரும் மழை, வெயிலைப் பெற்று, பிறர் பராமரிப்பு, பாதுகாப்பின்றித் தானே வளர்ந்து பெரிய மரமானவுடன்,
அம்மரத்தின் நிழலில் சிலர் வந்து இளைப் பாறிச் செல்வார்கள். சிலர் மரத்திலுள்ள பழங்களை பறித்துண்டு பசியைப் போக்கிக் கொள்வார்கள். இன்னும் சிலர் ஆடு, மாடுகளுக்கு அந்த மரத்தின் இலைகளைப் போட்டு, அந்த உயிரினங்களின் பசியாற்றுவார்கள். அந்த மரம் பலவிதமான பறவையினங்கள் கூடுகட்டி வாழும் வசிப்பிடமாக இருக்கும்.
ஒரு மரத்திலுள்ள அனைத்தும் மற்றவர்களுக்குப் பயன் தருகிறது. ஆனால் மற்றவர்களால் இந்த மரத்திற்கு எந்தப் பயனும் கிடையாது. அந்த சாலையோர மரத்தைப் போன்றதுதான் இவனது இப்பிறவி வாழ்க்கை. இவனுக்கு நிலையான நண்பர்கள்
அமையமாட்டார்கள். இவனால் தனக்கு என்ன நன்மை கிடைக்குமென்ற எண்ணத்தில்தான் இவனைத் தேடிவந்து பழகுவார்களேதவிர, இவனுக்கு நன்மை செய்யும் எண்ணத்தில் யாரும் பழகமாட்டார்கள்.
இப்பிறவியில் இவனும் மனிதன், விலங்கு, பறவை என அனைத்து உயிர்களுக்கும் பசியாற்றி நன்மை செய்வான். இளகிய மனமும் இரக்க குணமும் உடைய இவன் எல்லார் பிரச்சினைகளையும் தீர்த்து நன்மை, உதவி செய்வான். ஆனால் இவனுக்கு ஒரு சிரமம், பிரச்சினையென்றால் உதவிசெய்ய யாரும் வரமாட்டார்கள்.
அவதார புருஷரான கிருஷ்ணர்- யாதவர்கள்,
பாண்டவர்கள், தன்னிடம் உதவிதேடி வந்தவர்கள், தன்னைச் சார்ந்தவர்கள் என அனைவருக்கும் வந்த அனைத்து துன்பங்களையும் தீர்த்தார். அவர்களைக் காப்பாற்றினார். ஆனால், கிருஷ்ணருக்கு உறவுகளாலோ நட்புகளாலோ எந்த நன்மையும் உதவியுமில்லை. அந்த கண்ணனின் வாழ்க்கைதான் இவனுக்கு.
இல்லறம்
"வட்டகுயமுன் னாட்குமுன்னே
வந்துவாழ்ந் திருந்த
வம்சசுமங் கலிப்பெண்
கோபம் உண்டு
நீட்சமாய் மங்கையரைப்
புணர்ந்த தோஷம்
கோரியதோர் இவன் குலத்தில்
மணமில்லா பெண்ணும்
மனமொடிந்து சாபம்விட்டு
மாண்ட தோஷம்
இப்பிறவி வாழ்வதனில்
இருளாய் சூழ்ந்ததப்பா.'
இல்லறம் என்பதும் இவனுக்கு இனிமையானதாக இல்லை. இவனுக்கு திருமணம் தடை, தாமதப்பட்டு நடந்தது. இளம்வயதிலேயே காதல் நிகழ்வுகள் உண்டு. எத்தனைப் பெண்களுடன் பழகினாலும், நேசமாக இருந்தாலும், இவனது பருவ வயது கடந்தபின், போன பிறவியில் யார் மனைவியாக இருந்தாளோ, அவளையே இப்பிறவியிலும் திருமணம் புரிந்தான். இவனது மனைவி இவன் சொந்த ஊரிலோ அருகிலுள்ள ஊரிலோ பிறந்த வளர்ந்து இவனை மணம்புரிந்தாள்.
இல்லற வாழ்விலும் தன் மனைவியால் எந்த இன்ப சுகமும் முழுமையாக அடையமுடி யாதவன். வம்ச சுமங்கலிப்பெண் சாபமும், கன்னிப்பெண் சாபமும் இவன் மனைவிக்கு.
"வம்சத்து மங்கைக்கு
வாழ்வதனில் ஈனமடா
வாழ்வும் நோயும்
வாட்டியே வைத்ததடா
பொருளைக் கொடுத்து
மருந்தால் கரைப்பாளே'
திருமணம் முடிந்து சிறிது காலத்திலேயே அவளுக்கு கர்ப்பப்பை, வயிறு, கட்டி, புற்று, மூலநோய் போன்று அவ்வப்போது ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டாள்.
முற்பிறவியிலேயே இவனும், இந்த மங்கை நல்லாளும் கணவன்- மனைவியாக வாழ்ந்தவர்கள். ஆனால் இருவரும் இணைந்து முற்பிறவியில் வாழவேண்டிய காலம் முழுவதும் வாழ்ந்து முடிக்கவில்லை. இவன் தன் மனைவியைவிட்டு, மாற்று இனத்தைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண்ணைத் தேடிச் சென்றுவிட்டான். இவன் முற்பிறவி மனைவி கணவன் சுகம் அனுபவிக்க முடியாமல் சந்நியாசிபோல வாழ்ந்து மறைந்தாள்.
சென்ற பிறவியில் அந்த சுமங்கலி, இவனுடன் வாழாமல்போன குறைபட்ட கால வாழ்க்கையை இப்பிறவியில் வாழ்ந்து முடிக்கவே இருவரும் பிறந்து, கணவன்- மனைவியாக இணைந்தார்கள்.
சென்ற பிறவியில் தன் மனைவிக்குச் செய்யாத அனைத்து சுக, சௌகரியங்களையும் செய்து, அவள் நோய்க்கு முறையான மருத்துவம் பார்த்து, அவளை மனம் நோகாமல் பாதுகாத்தான். ஆனால் மனைவியால் எந்த சுகமும் அனுபவிக்காமல் "இல்லறத்துறவி'யாக வாழ்ந்தான்.
சென்ற பிறவியில் விடுபட்டுப்போன வாழ்க்கையை இவனும், மனைவியும் ஒரு மாமாங்கம் (12 வருடங்கள்) வாழ்ந்து முடித்து, இவன் மனைவியும் இம்மண்ணுலகைவிட்டு மறைந்தாள். இப்போது இவன் தனிமரமாகி விட்டான்.
இன்று இவன் வாழ்வில் உண்டாகும் வேதனையை எடுத்தியம்ப யாருமில்லாத நிலையில், மனவிரக்தியுடன் என்னைத் தேடிவந்துள்ளான். அகத்தியன் யான் கூறியது உண்மைதானா? கடந்தகால வாழ்வில் இவை அனைத்தையும் அனுபவித்துள்ளானா என்று அவனையே கேள்'' என்றார்.
நான் அவரை நோக்கி, ""ஐயா, ஜீவநாடியில் அகத்தியர் கூறியது அனைத்தும் உண்மை தானா? இப்பலன்களைக் கடந்தகால வாழ்வில் அனுபவித்துள்ளீர்களா?'' என்று கேட்டேன்.
""ஆமாம் ஐயா. அகத்தியர் கூறியது
அனைத்தும் உண்மைதான். இதுவரை என் வாழ்வில் ஏதாவது ஒரு குறையுடனேயே வாழ்ந்து வருகிறேன். முழுமையில்லாத வாழ்வுதான். இனிவரும் என் வருங்கால வாழ்வில், என் முற்பிறவி கர்மவினை, பாவ- சாபப் பதிவுகளின்
பாதிப்பில்லாமல், நிம்மதியான வாழ்வை யடைய அகத்தியரிடமே சரியான வழியைக் கேட்டுக்கூறுங்கள்'' என்றார்.
ஜீவநாடியைத் தொடர்ந்து படிக்கும்போது-
"அகத்தியர் மைந்தனுக்கு
யான் உரைப்பேன்
அருமருந்து வழியினையே
அகமும் புறமும்
மகிழ்ந்த றிவாய்
கேட்டி டவே
அகத்தியன் வாக்குதனை
அறிந்து வாழ்ந்தால்
புதுவாழ்வும் புனல்சுகமும்
அடைவானே மைந்தனுமே
புகழும் புன்னகையும்
கூடுமடா பின்வாழ்வில்'
எனக் கூறி, இவரின் வருங்காலத்தில் நல்வாழ்வடைய சரியான வாழ்க்கை நடைமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் கூறினார்.
அதனை அடுத்த இதழில் அறிவோம்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-02/krish-t.jpg)